 |
| நான் , கண்ணன் மற்றும் ரவி |
|
 |
| தோட்டத்திலிருந்து தெரிவது வருசநாடு |
|

பொதுவாகவே மலையும் மலை சார்ந்த இடங்களுக்கு செல்லுவதும் மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கும். அதிலும் மலையேற்றம் மேற்கொண்டாலோ (trekking) கேட்கவே வேண்டாம். ஆனால் இந்த முறை நான் நடந்து செல்லாமல் வண்டியில் செல்ல முடிவு எடுத்தேன். காரணம் பயண தொலைவும் , போதிய காலமின்மையும் ஆகும். ஒரு நாள் மாலை வேளையில் நண்பன் கண்ணன் திடீரென அழைத்து , வெள்ளிமலை என்ற இடத்திற்கு செல்வோமா எனக்கேட்டான். சரி என்று கிளம்பிவிட்டேன். இந்த இடத்தில் வெள்ளிமலை பற்றி சிறு குறிப்பு- தேனியிலிருந்து வருஷநாடு செல்லும் வழியில் கடமலைக்குண்டு என்ற ஊர் வருகிறது. அங்கிருந்து மேற்காக திரும்பினால் முதலில் குமணன்தொழு,அடுத்து கோவன்கள், அடுத்து கோரையூத்து வருகிறது. கோரையூத்து ஊருடன் மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு ஆகியவை முடிந்துவிடுகிறது. அலைபேசி தொடர்புகூட அரிதாகத்தான் கிடைக்கின்றது. கோரையூத்தை கடந்து சென்றால் 25 கி.மீ தொலைவிற்கு வேறு ஊர்களே கிடையாது. அடுத்து பொம்மராசபுரம் என்ற ஊர் வருகின்றது. அதையும் கடந்து சென்றால் மலை அடிவாரத்தில் அரசரடி என்ற ஊர் உள்ளது. இறுதியாக இன்னும் 10 கி.மீ பயணித்தால் வெள்ளிமலை என்ற இடம் வருகின்றது. கவனிக்க , இதை இடம் என்றுதான் குறிப்பிடுகின்றேன் காரணம் அங்கு வீடுகளோ அல்லது மனிதர்களோ கிடையாது. வெள்ளையர் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட ஒரு இடம்.இங்கு இருந்துதான் வைகை ஆறு உற்பத்தி ஆகின்றது. ஆகவே இந்த இடத்திற்கு
தலை வைகை என்று பெயர். தேனியிலிருந்து இந்த வெள்ளிமலைக்கு தினமும் ஐந்து முறை பேருந்து இயக்கபடுகின்றது. கோரையூத்தைக் கடந்தவுடன் வனத்துறை சோதனைச்சாவடி வருகின்றது.அதற்கு அப்பால் வேறு தனியார் வண்டிகள் அனுமதிக்கப்படுவதில்லை. ஆகவே தான் இந்த வெள்ளிமலை இன்னும் பசுமை மாறாமல் ,அடர்ந்த வனமாக உள்ளது. உண்மையிலேயே தமிழ்நாட்டில் இப்படி ஒரு வனம் இருப்பது வியப்புதான். இந்த வகையில் வெள்ளிமலையின் வனத்துறையினர் போற்றுதலுக்கு உரியவர்கள்.இந்த வனப்பகுதி வெகு விரைவில் புலிகள் காப்பகமாக அறிவிக்கப்படலாம் என்ற செய்தியை வனத்துறையினர் தெரிவித்தனர். அரசரடியிலிருந்து எந்த ஒரு மலைத்தோட்டத்திற்கும் செல்லவேண்டுமானால் ஏறத்தாழ 15 கி.மீ நடந்து தான் செல்லவேண்டும், ஆகவே தோட்டத்தொழிலாளர்கள் அனைவரும் (பொம்மராசபுரம் மற்றும் அரசரடி ஊர்களில் உள்ளவர்கள் ) அரசரடியிலுள்ள இரு தனியார் வண்டிகளை (ஜீப்) பயன்படுத்துகின்றார்கள். அங்கு உள்ள மலைத்தோட்டங்கள் தனியான பெயர் கொண்டு அழைக்கப்படுவது இல்லை. மாறாக அவை ஒவ்வொன்றின் குறுக்க (ஏக்கர்) அளவை வைத்து அழைக்கப்படுகின்றன. உதாரணமாக நாங்கள் சென்றது 80 குறுக்கம் பரப்பளவுள்ள தோட்டம். ஆகவே இதை 80 என்றே அழைக்கின்றனர். அதிகாலை உணவை கோரையூத்தில் வாங்கிக்கொண்டு செல்லும் வழியில் ஒரு காட்டு ஓடையின் ஓரத்தில் அமர்ந்து உட்கொண்டோம். பின்னர் அரசரடி சென்று எங்களுக்கு உதவியாக வந்த ரவி என்பவரை சேர்த்துக்கொண்டோம். வெள்ளிமலை சாலையில் பயணித்து , பின்பு நங்கள் செல்லவேண்டிய மலைத்தோட்ட பாதையில் பயணப்பட்டோம். இதில் பயணம் செய்யும் வண்டி நான்கு சக்கரங்களிலும் இயங்கும் (four wheel drive) வண்டியாக இருக்க வேண்டியது கட்டாயம். இந்த மலைப்பாதை வண்டிப்பயணம் மிகவும் இனிமையான ஒன்று என சொல்லுவேன் , அதே நேரத்தில் சற்று அச்சமும் ஏற்படுகின்றது . ஏறத்தாழ ஒரு மணி நேர பயணத்திற்கு பிறகு நாங்க அடைய வேண்டிய தோட்டத்தை அடைந்தோம். மெல்லிய சாரல் விழுந்து கொண்டிருந்ததது , அங்கு உள்ள தோட்ட மேலாளருடன் அரை மணி நேரம் பேசி கொண்டிருந்தோம்.எங்களுக்கு சூடான தேநீர் தயாரித்துக் கொடுத்தார். அனைவரும் எங்களை மிகவும் கனிவுடன் கவனித்துக்கொண்டனர். தோட்டத்தை சுற்றி பார்த்துவிட்டு வர நேரம் சரியாக மதியம் 1.30 ஆகியிருந்தது. தயாராகியிருந்த மதிய உணவை முடித்தோம். பின்பு அங்கு உள்ளவர்களுடன் ஒரு மணி நேரம் உரையாடிக்கொண்டிருந்தோம். அந்த வனத்தின் அளவு, மலைத்தோட்டங்களின் அளவு , அங்கு வாழ்கின்ற விலங்குகள் , விலங்குகளால் ஏற்படக்கூடிய நன்மை தீமை மற்றும் பல செய்திகளை அறிந்து கொண்டோம். உண்மையில் மலைத்தோட்டங்களில் வாழ்வது என்பது ஒரு துறவு வாழ்க்கை என்றே கூறுவேன். ஆடம்பரங்களை விரும்பாமல் வளமைகளை எதிர்பார்க்காமல் மலைக்காடுகளில் வாழ்வது துறவு வாழ்க்கைக்குச் சமமானது. சரியாக மூன்று மணியளவில் அங்கிருந்து கிளம்பி ,கீழே வந்து தலை வைகையில் குளித்தோம். வருகிற வழியில் உள்ள கணகாணிப்பு கோபுரத்தின் உச்சியில் நின்று அழகான காட்சிகளை கண்டோம். நாங்கள் இருக்கும் மலைக்கு எதிரே தெரிந்த சதுரகிரி மகாலிங்க மலை, மற்றும் அதன் தொடர்ச்சியாக கள்ளி மலை , குற்றால மலை , பொதிகை மலை ஆகியவற்றின் பின் பகுதிகளை கண்டோம். பிறகு கீழே அரசரடி வந்து சேர்த்தோம். அங்கு நண்பர் ரவி (வழிகாட்டி) வீட்டில் தேநீர் குடித்து விட்டு ஊர் திரும்பினோம். செல்லும் போதும் , திரும்பும்போதும் வனப்பசு, கருங்குரங்கு, சிங்க முக குரங்கு, புள்ளிமான் ஆகியவற்றை கண்டோம். இதுவரை வனப்பகுதிகளில் நடந்து சென்றே பழக்கப்பட்ட எனக்கு வண்டியில் மலைப்பாதையில் பயணித்தது ஒரு இனிமையான அனுபவமாக இருந்தது. ஒரே நாளில் திரும்பாமல் ஒரு இரவு மேலே உள்ள மலைத்தோட்டத்தில் தங்கினால் இன்னும் பல விலங்குகளை காணலாம் , இந்த பயணத்தையும் இன்னும் சிறப்பானதாக ஆக்கியிருக்கலாம். இருந்தாலும் மன மகிழ்ச்சியாக இருந்தது.
Comments