2024 தேவார ஆலய பயணம் - 1


                                           பாடல் பெற்ற ஆலய பயணம்
 
 

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாத இறுதி வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் தேவாரப் பாடல் பெற்ற சிவ ஆலயங்களுக்கு குடும்பத்துடன் சென்று  வழிபடுவது வழக்கம்.  அதுபோல இந்த ஆண்டும் குடும்பத்தோடு சிதம்பரம் மற்றும் வைத்தீசுவரன் கோவில் ஆகிய சிவாலயங்களை சுற்றி உள்ள பாடல் பெற்ற ஆலயங்களுக்கு சென்று வந்தோம். ஆலய வழிபாடு என்பது  மனதிற்கு அமைதியும், மகிழ்ச்சியும் தரக்கூடியது. அவ்வகையில் இந்த ஆண்டும் எங்களது பயணம் மிகவும் இனிமையாக அதே நேரத்தில் மனதிற்கு புத்துணர்வு அளிப்பதாகவும் இருந்தது. 

வைத்தீசுவரன் கோவில் மற்றும் சிதம்பரம் ஆகிய ஊர்களை சுற்றி உள்ள ஆலயங்களை தேர்வு செய்ததால், அந்த ஆலயங்களுக்கு செல்ல ஏதுவாக ஏதாவது ஒரு மையப்பகுதியை தேர்ந்தெடுக்க வேண்டிய தேவை இருந்தது. அது வைத்தீசுவரன் கோவிலாக அமைந்தது மிகவும் சிறப்பு. 

தங்குவதற்கு உரிய விடுதி முன்பதிவு மற்றும் பயண வழித்தடங்கள் ஆகியவற்றை முன்கூட்டியே வெகு சிறப்பாக திட்டமிட்டு, அதற்கான முன்னேற்பாடுகளை முடித்து வைத்துவிட்டோம். டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி வியாழன் அன்று மாலை 4 மணி அளவில் எங்களது பயணத்தை தொடங்கினோம். சிவகாசியில் இருந்து வைத்தீசுவரன் கோவிலை அடைவதற்கு ஏறத்தாழ ஏழு மணி நேரம் ஆகும் என்பதால், மாலை 4 மணி அளவில் எங்களது பயணத்தை தொடங்கினோம். 

மதுரை தாண்டி மேலூருக்கு முன்பாக தேநீர் அருந்திவிட்டு எங்கள் பயணத்தை தொடர்ந்தோம். இரவு உணவிற்கு தஞ்சாவூர் புறநகர் பகுதியான வல்லம் புறவழிச் சாலையை அடையும் பொழுது மணி 9 ஆகியிருந்தது. அங்கிருந்த ஐங்கரன் உணவகத்தில் இரவு உணவை முடித்துவிட்டு எங்கள் பயணத்தை தொடர்ந்தோம். நாங்கள் தங்க வேண்டிய வைத்தீசுவரன் கோவில் விடுதியை அடையும் பொழுது இரவு மணி 11 ஆகியிருந்தது. பயணக்களைப்பு மிகுதியால் உடனே உறங்கச் சென்றோம். 
 
 
 
                                                                                முதல் நாள் - 27.12.2024
 
வழக்கமாக மார்கழி மாதத்தில் ஒவ்வொரு ஆலயமும் காலை 5 மணிக்கு நடை திறக்கும்  என்றாலும் கூட நாங்கள் செல்லும் ஆலயங்கள் பெரும்பாலும் சிற்றூர்களில் அமைந்திருப்பதால், அவை திறப்பதற்கு காலை ஏழு அல்லது ஏழரை மணி கூட ஆகிவிடும். வழக்கம்போல் காலை ஐந்து மணி அளவில் எழுந்து குளித்துவிட்டு ஆயத்தமாகி எங்களது வழிபாட்டு பயணத்தை தொடங்கினோம். 
 
 
 
 
                                                        திருக்கண்ணார் கோவில் - கண்ணாயிரம் உடையார். 


எங்கள் பயணத்தின் முதல் கோவில் குருமாணக்குடி என்ற  ஊரில் அமைந்துள்ள கண்ணாயிரம் உடையார் ஆலயம் . பாடல்பெற்ற காலமான ஏழாம் நூற்றாண்டில் இந்த ஊர் கண்ணார் கோவில் என்று அழைக்கப்பட்டது. வைத்தீசுவரன் கோவிலில் இருந்து ஏறத்தாழ ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு சிற்றூரில் அமைந்துள்ளது  இந்த ஆலயம் . 

தேவார பாடல் பெற்ற ஆலயங்களில் இவ்வாலயம் 71-வது ஆலயமாகவும், காவிரி வடகரை ஆலயங்களில் இவ்வாலயம் 17-வது ஆலயமாகவும் திகழ்கிறது.  மூலவர் கண்ணாயிரம் உடையார் , கண்ணாயிரம் உடைய நாயனார் என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறார்.  இறைவி முருகுவளர் கோதை என்ற பெயரில் அழைக்கப்படுகிறாள்.  இந்த ஆலயம் ஞானசம்பந்தர் மற்றும் வள்ளலார் ஆகியோரால் பாடப்பெற்றது.

காலை 7:30 மணி அளவில் இந்த ஆலயத்தை நாங்கள் அடைந்தோம்.  ஆனால் அவ்வளவு நேரம் ஆகியும் இந்த ஆலயம் திறக்கப்படவில்லை. ஆலயத்திற்கு உரிய அர்ச்சகர் அந்நேரம் கூட வந்து சேரவில்லை. ஆலயத்தை பராமரிக்கும் உள்ளூர் அடியார் ஒருவர் நாங்கள் வந்திருப்பதை அறிந்து எங்களுக்காக ஆலயத்தை திறந்து தூய்மை செய்து, விளக்கு ஏற்றி தீப ஆராதனை காட்டினார்.  பணத்தையோ அல்லது வருமானத்தையோ  எதிர்பாராமல் இவர் போன்ற எத்தனையோ உள்ளூர் அடியார்களின் மனமுவந்த இறைத் தொண்டுகளால் தான் இதைப் போன்ற ஆலயங்கள் இன்னும் அருள் நிறைந்து காட்சியளிக்கின்றன.  இவர்களது பணியை இந்த மாதிரியான கட்டுரைகளில் குறிப்பிட்டே ஆகவேண்டும். கருவறையில் இறைவன் ஒளிமயமாக வீற்றிருந்தார். மனது நிறைந்த மகிழ்வோடு இறைவனைத் தொழுதுவிட்டு திருச்சுற்று மாளிகையை வலம் வந்து சற்று நேரம் அமர்ந்து விட்டு அடுத்த ஆலயத்தை நோக்கி எங்களது பயணத்தை தொடர்ந்தோம்.  தேவார பாடல் பெற்ற சிறப்பு வாய்ந்த ஆலயமாக  இருந்தாலும் கூட மக்களின் வரவு மிகவும் குறைவாக இருப்பதால் ஆலயம் வெறிச்சோடி காணப்படுகிறது . ஆலயத்திற்கு முன்பாக அமைந்துள்ள கோவில் திருக்குளம் அவ்வளவு அழகாக இருந்தது. இந்த ஆலயம் காலை ஏழு மணியிலிருந்து 12 மணி வரையிலும், மாலை 4 மணியிலிருந்து 7 மணி வரையிலும் திறந்திருக்கும். 













                                                                          திருநின்றியூர் - லட்சுமிபுரீசுவரர்.
 
 
எங்கள் பயணத்தின் அடுத்த ஆலயமாக நாங்கள் சென்றது திருநின்றியூர் லட்சுமிபுரீசுவரர் கோவில்.  முதல் ஆலயமான திருக்கண்ணார்புரத்திலிருந்து திருநின்றியூர் செல்வதற்கு வெறும் இரண்டு கிலோமீட்டர் தொலைவு தான்.
அனுசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான வழிபாட்டு ஆலயம் என்பதால் இந்த ஆலயத்திற்கு வருகின்ற பக்தர்களின் எண்ணிக்கை சற்றே மிகுதியாக இருக்கிறது.  ஆலயம் மிகவும் தூய்மையாகவும் சிறப்பாகவும் அறநிலைத்துறையால் பேணப்பட்டு வருகிறது. வழக்கம்போல் ஆலய பராமரிப்பில் உள்ளூர் மக்களின் பங்களிப்பையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். 

ஆலயத்தின் இறைவன் பெயர் லட்சுமிபுரீசுவரர்.  இறைவியின் பெயர் உலகநாயகி.
 





தேவார பாடல் பெற்ற ஆலயங்களில் இது 73-ஆவது ஆலயமாகவும், காவிரி வடகரை ஆலயங்களில் இது 19-வது ஆலயமாகவும் திகழ்கிறது.  இறைவனை ஞானசம்பந்த சுவாமிகள். திருநாவுக்கரசு சுவாமிகள். சுந்தரர். வள்ளலார் ஆகியோர் பாடியுள்ளனர்.  கருவறையில் இறைவன் ஒளிமயமாக காட்சி தந்தது எங்களுக்கு மிகவும் நிறைவாக இருந்தது.  இறைவன், இறைவியை வழிபட்டு விட்டு திருச்சுற்றுமாளிகையை சுற்றி வந்து சிறிது நேரம் அமர்ந்திருந்தோம்.

கோவில் நடை திறந்திருக்கும் நேரம் காலை 7 மணியிலிருந்து 12 மணி வரை  மாலை 4 மணியிலிருந்து 8 மணி வரையாகவும் இருக்கிறது 


                                      நீடூர் - சோமநாத சுவாமி திருக்கோவில்

எங்களது முதல் நாள் பயணத்தில் மூன்றாவது ஆலயமாக நீடூர் என்ற ஊரில் அமைந்துள்ள சோமநாதர்  திருக்கோவிலாகும். மயிலாடுதுறையில் இருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இவ்வாலயம். 

இறைவன் சோமநாதசுவாமி என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்.  இறைவி வேயுறு தோளியம்மை மற்றும் ஆலால சுந்தரி ஆகிய பெயர்களில் அழைக்கப்படுகிறாள்.  தேவார பாடல் பெற்ற ஆலயங்களில் இவ்வாலயம் 75-வது ஆலயமாகவும், காவிரி வடகரை ஆலயங்களில் இவ்வாலயம் 21-வது ஆலயமாகவும் திகழ்கிறது. இவ்வாலயம் திருநாவுக்கரசு சுவாமிகள் மற்றும் சுந்தரர் ஆகியோரால் பாடப்பெற்றது. வள்ளலாரும் இந்த ஆலயத்தின் இறைவனை குறித்து பாடியுள்ளார் .
 


 
 இந்த ஆலயத்திற்கு உள்ள மற்றும் ஒரு சிறப்பு 63 நாயன்மார்களில் ஒருவரான முனையாடுவார் நாயனார் முக்தி அடைந்த தலம். நடை திறந்திருக்கும் நேரம் காலை 7 மணி முதல் 12 மணி வரையும். மாலை 5 மணி முதல் 8 மணி வரையும் ஆகும். 

காலை உணவிற்கான நேரமாகிவிட்டதால் மீண்டும் மயிலாடுதுறை நோக்கி பயணித்து, மயிலாடுதுறையின் புறநகர் பகுதியில் உள்ள அன்னமிர்தா என்ற உணவகத்தில் எங்களது காலை உணவை முடித்தோம். உணவின் தரம் மிகவும் சிறப்பாக இருந்தது. 

காலை உணவை முடித்துவிட்டு எங்கள் பயணத்தைத் தொடர்ந்தோம். அடுத்ததாக நாங்கள் செல்ல வேண்டிய ஆலயம் திருக்கொருக்கை. அந்த ஆலயத்திற்கு செல்லும் வழியில் அமைந்துள்ள ஒரு சிற்றூர் ஆனந்ததாண்டவபுரம் என்பதாகும். இந்த ஆனந்ததாண்டவபுரத்தில் அமைந்துள்ள சிவாலயம் பாடல் பெற்ற சிவாலயம் இல்லை என்றாலும் கூட எண்ணூறு ஆண்டுகள் பழமையான சிவாலயமாக இருக்கிறது.  இந்த ஆலயத்தில் உள்ள இறைவன் பஞ்சவடீசுவரர் என்று அழைக்கப்படுகிறார் . இறைவி கல்யாணசுந்தரி என்று அழைக்கப்படுகிறார். இந்த ஆலயம் ஊர் மக்களால் மிகவும் சிறப்பான முறையில் நிர்வாகிக்கப்பட்டு வருகிறது. ஆலயம் மிகவும் தூய்மையாக இருக்கிறது.  ஆலயத்தின் முன்பு அமைந்துள்ள திருக்குளம் மிகவும் பெரியதாகவும், தூய்மையானதாகவும், எழில் நிறைந்த காட்சியோடும் இருக்கிறது. 
 



 

                                         கொருக்கை - வீரட்டேசுவரர். 


பயணத்தில் அடுத்து சென்றது குறுக்கை(கொருக்கை) வீரட்டேசுவரர் திருக்கோவில். குறுக்கையானது நீடூர் என்ற  சிற்றூரிலிருந்து  ஏழு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
 
இந்த ஆலயம் அட்ட வீரட்டான தலஙகளில் ஒன்று. அதாவது சிவபெருமான் வீரச்செயல்கள் புரிந்த எட்டு இடங்களில் இந்த ஆலயம் அமையப்பெற்ற இடமும் ஒன்று. இது காமனை எரித்த இடம் என்பதால் அட்டவீரட்டான ஆலயங்களில் ஒன்றாக விளங்குகிறது (மற்ற ஏழுவீரட்டான தலங்கள் - கண்டியூர் திருக்கோவிலூர், திருவதிகை, கீழப்பழுவூர், திருவிற்க்குடி, வழுவூர், மற்றும் திருக்கடையூர்.)
 
தேவாரப் பாடல் பெற்ற ஆலயங்களில் இது 80-வது ஆலயமாகவும், காவிரி வடகரை ஆலயங்களில் இது 26-வது ஆலயமாகவும் திகழ்கிறது. இங்கு இறைவன் வீரட்டான உடையார் என்றும் குறுக்கை உடையார் என்றும் அழைக்கப்படுகிறார். இறைவி ஞானாம்பிகை என்று அழைக்கப்படுகிறார்.
திருநாவுக்கரசு சுவாமிகள் பாடிய ஆலயம். 
 




 
 அண்மையில் நடந்து முடிந்துள்ள குடமுழுக்கால் ஆலயம் பொலிவோடு காட்சி தந்தது. இறைவனையும், இறைவியையும் வழிபட்டுவிட்டு திருச்சுற்றுமாளிகையில் உள்ள கடவுள்களை வழிபட்டுவிட்டு சற்றுநேரம் அமர்ந்துவிட்டு, அடுத்த ஆலயத்தை நோக்கி பயணிக்க ஆரம்பித்தோம் . 
ஆலயம் நடை திறந்திருக்கும் நேரம் காலை 6 மணி முதல் மதியம் 12:30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் ஆகும். 

                                திருப்புஙகூர் - சிவலோகநாதர் கோவில்.

திருக்கொருக்கையில் இருந்து இந்த ஆலயம் ஏறக்குறைய 9 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. வைத்தீசுவரன் கோவிலில் இருந்து இவ்வாலயம் 4 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

இறைவன் சிவலோகநாதர் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்.  இறைவி சொக்கநாயகி என்ற பெயரில் அழைக்கப்படுகிறார். தேவாரபாடல் பெற்ற ஆலயங்களில் இது 74-ஆவது ஆலயமாகவும், காவிரி வடகரை ஆலயங்களில் இது 20-வது ஆலயமாகவும் திகழ்கிறது. திருநாவுக்கரசு சுவாமிகள், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவராலும் பாடல் பெற்ற சிவாலயம்.  இந்த ஆலயத்திற்கு உரிய மற்றும் ஒரு சிறப்பு இறைவன் கலிக்காம நாயனாருக்கு சூலை நோய் நீக்கிய இடம். 






கோவில் திறந்திருக்கும் நேரம் காலை 8:30 மணி முதல் 12.30 மணி வரை மாலை 4 முதல் 8:30 மணி வரை ஆகும். 

எழில் மிகுந்த சிற்ப வேலைபாடுகளை கொண்ட உள்திருசுற்றுமாளிகையை வலம் வந்து சற்றுநேரம் ஓய்வெடுத்து கோவிலின் அழகை ரசித்தோம். ஆலயத்தின் வெளிச்சுற்றுமாளிகையோ மிகவும் பெரியது. பார்க்கவே பிரமிக்கத்தக்க வகையில் இருந்தது.
 
 
இந்த ஆலயத்தைப் பற்றிய ஒரு பொய்ச் செய்தியைப் பற்றியும் இங்கு குறிப்பிட்டு ஆகவேண்டும். அந்த பொய்செய்தி திரைப்படங்களின் வாயிலாக பரப்பப்பட்டு, இன்றளவும் உண்மைபோலே அடியார் பெருமக்களால் நம்பபடுகிறது. அந்த செய்தி பொய்யானது வெறும் புனைவுகளின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டது.  அந்த செய்தியில் எந்த உண்மையையும் இல்லை என்பதை கூறவே இங்கு பதிவு செய்கிறேன். நந்தனார் நாயனார் என்று ஒருவர் இருந்ததாகவும், அவர் தோல்களால் செய்யப்பட்ட இசைக்கருவிகளை செய்து கோவில்களுக்கு வழங்கி வந்தார் என்றும், அவர் புலையர் சாதியைச் சேர்ந்தவர் என்றும், அவர் கோவிலுக்குள் வர அந்தகாலத்தில் அனுமதி இல்லாததால் வெளியில் இருந்தே இறைவனை தொழுதார், அப்படி தொழும்போது நந்தியம்பெருமான் இறைவனை காண முடியாமல் மறைத்ததால் இறைவனிடம் நந்தனார் நாயனார் முறையிட்டதாகவும், இறைவன் நந்தனாருக்காக மனமிரங்கி நந்தியை சற்று விலகும் படி சொன்னதாகவும், அதனால் தான் இந்த ஆலயத்தில் நந்தியம்பெருமான் சற்று விலகி இருப்பதாக ஒரு கட்டுக்கதை காலகாலமாக பரப்பப்பட்டு வருகிறது.  இதில் எள்ளவும் உண்மை இல்லை. தேவாரப் பாடல்களிலும் சரி தேவாரப் பாடலுக்குப் பிறகு 63நாயன்மார்களை பற்றி பாடிய சேக்கிழார் பெருமான் எழுதிய பெரியபுராணத்திலும் சரி, எந்த ஒரு இடத்திலும் நந்தனார் நாயனாரை பற்றியோ அல்லது நந்தி விலகியதை பற்றியோ குறிப்பிடவே இல்லை. இந்தக் கட்டுக் கதை 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் தான் புனையப்பட்டது. 
 
மணி நண்பகல் 12 தாண்டி விட்டதால் மேற்கொண்டு எந்த ஒரு ஆலயத்திற்கும் செல்ல முடியாது என்பதால் பயணத்தை முடித்து, ஓய்வெடுக்க விடுதிக்குச் சென்றோம். முதல் நாள் பயணத்தின் மிகுதியான களைப்பால் மதிய உணவை அருகில் இருந்த உணவகத்தில் முடித்துவிட்டு சற்று நேரம் உறங்கினோம்.  மாலை 4 மணியளவில் எழுந்து தேநீர் அருந்திவிட்டு மாலை பயணத்தை தொடங்கினோம்.

                    இலுப்பைப்பட்டு - நீலகண்டேசுவரர் திருக்கோவில் 
 
திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான இந்த நீலகண்டேசுவரர் திருக்கோவில் வைத்தீசுவரன் கோவிலில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. 

இறைவனின் பெயர் நீலகண்டேசுவரர்.  இறைவி அமுதகாரவல்லி.  தேவாரபாடல் பெற்ற ஆலயங்களில் இது 84-வது ஆலயமாகவும், காவிரி வடகரை ஆலயங்களில் இது 30-வது ஆலயமாகவும் திகழ்கிறது,  சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய ஆலயம்.  தேவார காலத்தில் இந்த ஆலயம் இருந்த ஊர் பழமண்ணிப்படிக்கரை என்று அழைக்கப்பட்டது.
 



 
 
இறைவனின் நிறைவான காட்சி கிடைக்கப்பெற்று திருச்சுற்றுமாளிகை சுற்றிவந்து சற்று நேரம் அமர்ந்து விட்டு  பயணத்தை தொடர்ந்தோம். 
நடை திறந்திருக்கும் நேரம் காலை 7:00 மணி முதல் மதியம் 12 வரையும்,  மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையாக இருக்கிறது.


                                  திருவாளப்புத்தூர் - மாணிக்கவண்ணர்
 
இலுப்பைப்பட்டு ஆலயத்தில் இருந்து ஏறத்தாழ 8 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இந்த ஆலயம். இறைவனின் திருப்பெயர் மாணிக்கவண்ணர். இறைவியின் பெயர் வண்டமர் பூங்குழலி. தேவார பாடல் பெற்ற ஆலயங்களில் இது 83-வது ஆலயமாகவும், காவிரி வடகரை ஆலயங்களில் இது 29-வது ஆலயமாகவும் திகழ்கிறது. சுந்தரர் மற்றும் திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற ஆலயம்.  நடை திறக்கும் நேரம் காலை 7.30 மணி முதல் மதியம் 11 வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் ஆகும் . 

குடமுழுக்கு திருப்பணிகள் ஆலயத்தில் நடைபெற்று வந்ததால் நன்றாக கோவிலின் முழு அழகையும் ரசிக்க முடியாமல் இறைவனை மட்டும் வழிபட்டுவிட்டு அடுத்த ஆலயத்தை நோக்கி பயணிக்க ஆரம்பித்தோம். 
 

                      திருக்கருப்பறியலூர் - குற்றம்பொறுத்த நாதர்.

திருவாளப்புத்தூர் ஆலயத்திலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த ஊர்,  தற்போது தலைஞாயிறு என்று அழைக்கப்படுகிறது. 
 
இறைவனின் பெயர் குற்றம் பொறுத்தநாதர்.  இறைவியின் பெயர் கோல்வளை நாயகி .  தேவாரப் பாடல் பெற்ற ஆலயங்களில் இது 81-வது ஆலயமாகவும், காவிரி வடகரை ஆலயங்களில் இது 27-வது ஆலயமாகவும் திகழ்கிறது.  சுந்தரர் மற்றும் ஞான சம்பந்தபெருமான் ஆகியோரால் பாடப்பெற்ற ஆலயம் இது. 

இந்த ஆலயம் அமையப்பெற்ற ஊர் மேலைகாழி என்றும் அழைக்கப்படுகிறது காரணம் கருவறையின் பின்புறம் இங்கு சீர்காழியைப் போலவே மலைக்கோவில் அமைந்துள்ளது. கோவிலின் கீழ்தளத்தில் அம்பாளும், மேல்தளத்தில் சட்டநாதரும் வீற்றிருக்கிறார்கள். ஒவ்வொரு வெள்ளியும் சட்டநாதருக்கு தனிப்பட்ட பூசைகளும் அபிசேகங்களும் நடைபெறுகிறது. 
 




 
தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான இந்த ஆலயத்தில் அண்மையில் நடைபெற்று முடிந்துள்ள குடமுழுக்கின் காரணமாக ஆலயம் வண்ணமயமாக எழில்மிகுந்து காட்சியளிக்கிறது. வெளி சுற்றுமாளிகையின் சிற்பங்களையும் கோட்டங்களில் உள்ள சிற்பங்களையும்  மகிழ்வுடன் கண்டுகளித்துவிட்டு, சற்று நேரம் அமர்ந்துவிட்டு வெளியேறினோம்.

நடை திறந்திருக்கும் நேரம் காலை 8:00 மணி முதல் 11:30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் 7:30 மணி வரையிலும் ஆகும் 

                                  திருக்குரக்காவல் - குந்தளேசுவரர்

திருக்கருப்பறியலூரில் இருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இவ்வாலயம், தேவாரப் பாடல் பெற்ற ஆலயங்களில் 82-ஆவது ஆலயமாகவும், காவிரி வடகரை ஆலயங்களில் 28-வது ஆலயமாகவும் திகழ்கிறது.  இறைவன் குந்தளேசுவரர் என்று அழைக்கப்படுகிறார்.  இறைவி குந்தளாம்பிகை என்று அழைக்கப்படுகிறார். நாவுக்கரசர் பாடிய ஆலயம். 
 


அர்ச்சகரின் கைவண்ணத்தில் கருவறையில் உள்ள குந்தளேசுவரர் வண்ணமயமாக எழில் நிறைந்து காட்சியளித்தார்.  மலர் அலங்காரங்களும், விளக்குகளும் இறைவனுக்கு அழகு சேர்த்தன. சிறிய கோவில்தான் என்றாலும் எந்த குறையும் இல்லாமல் மிகவும் தூய்மையாகவும், அழகுடனும், நேர்த்தியாக பராமரிக்கப்பட்டு வருகிறது. நடை திறந்திருக்கும் நேரம் காலை 7.30 முதல் 12.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் 8 மணி வரையிலும் ஆகும்.
உள் திருச்சுற்றுமாளிகையை வலம் வந்துவிட்டு சற்றுநேரம் அமர்ந்து ஆலயத்தின் அழகை ரசித்துவிட்டு அடுத்த ஆலயத்தை நோக்கி பயணிக்க ஆரம்பித்தோம். 
 

                                       திருக்கோலக்கா - தாளபுரீசுவரர்.

திருக்குரக்காவல் ஆலயத்தில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த ஆலயம் தேவார பாடல் பெற்ற ஆலயங்களில் 69-வது ஆலயமாகவும், காவிரி வடகரை ஆலயங்களில் 15-வது ஆலயமாகவும் திகழ்கிறது. இந்த ஆலயம் அமைந்துள்ள பகுதி தற்போது சீர்காழி நகரின் ஒரு பகுதியாக உள்ளது. 

இறைவனின் திருப்பெயர் திருத்தாளமுடையார் என்றும் தாளபுரீசுவரர் என்றும் திருத்தாளமுடைய நாயனார் என்றும் அழைக்கப்படுகிறார்.  இறைவி ஓசை நாயகி என்றும் ஓசை கொடுத்த நாயகி என்றும் அழைக்கப்படுகிறார். 

சுந்தரர் மற்றும் ஞானசம்பந்தர் ஆகியோரால் பாடப்பட்ட ஆலயமாக திகழ்கிறது.  நடைதிறந்திருக்கும் நேரம் காலை 7:30 மணி முதல் 12:30 மணி வரையிலும், மாலை 4:30 மணி முதல் 8 மணி வரையிலும் ஆகும். . 
 
முதல் நாள் திட்டமிட்டபடி அனைத்து ஆலயங்களையும் தொழுது முடித்து விட்டபடியால் நாங்கள் தங்கி இருக்கிற வைத்தீசுவரன் கோவிலை நோக்கி பயணித்து அங்கு வைத்தீசுவரனை தொழ முடிவுசெய்தோம்.  இரவு பள்ளியறை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்று ஆவல் மிகுதியால் சற்று விரைவாக பயணித்து ஆலயத்தை அடைந்தோம்.  அங்கு பள்ளியறை நிகழ்ச்சிகள் ஆரம்பமாகி கொண்டிருந்தன. அடியார் பெருமக்களின் திருமுறை விண்ணப்பங்கள் முழங்க பள்ளியறை நிகழ்ச்சி இனிதே துவங்கியது.  அடியார்களோடு இணைந்து நாங்களும் திருமுறை விண்ணப்பம் செய்தோம். 
 
கருவறையில் உள்ள வைத்தியநாதசுவாமிக்கு இணையாக வணங்கப்படும் ஈசனின் மகனான முத்துக்குமார சுவாமியையும் வழிபட்டுவிட்டு வெளியே வந்தோம். இரவு உணவை முடித்துவிட்டு நாங்கள் தங்கும் விடுதிக்கு சென்றோம்.

இவ்வாறாக எம்பெருமானின் அருளால் முதல்நாள் பயணம் சிறப்பாக முடிந்தது.

Comments

Subramanian P said…
Saranvana Super Thankspa continue sending this kind of temple visit details
super

Popular posts from this blog

வாய்மை எனும் பொய்மை.