வாய்மை எனும் பொய்மை.


இந்தியா , எப்போதும் வாய்மையின்(சத்தியம்) வழி நிற்கும் , வாய்மையே அதன் உயிர் நாடி என்றே நாம் (நான்) அறிவுறுத்தப்பட்டு வந்திருக்கின்றோம். வாய்மையே வெல்லும் - இது தமிழக அரசின் குறியீட்டுச் சொல்லாக இருக்கின்றது. ஆனால் என்றைக்காவது இந்த நாடு வாய்மையை கடைப்பிடித்து இருக்கின்றதா என்று ஆராய்ந்தால் , இதன் வரலாற்றின் ஒரு பக்கத்தில் கூட அத்தகைய ஒரு செயலை நாம் காண முடியாது. இதிகாசங்களும், புராணங்களும் அநீதியையே இலக்கை அடைய உதவும் கருவியாக வலியுறுத்தி வந்திருக்கின்றன. அதை படித்து வளர்ந்ததாலோ என்னவோ இன்றைக்கு இந்திய நாடு எந்த ஒரு தளத்திலும் - அது அரசியலாகட்டும், சமயமாகட்டும் அல்லது பொருளாதாரமாகட்டும் - அநீதி ஒன்றையே அதன் துணையாக கொள்கிறது. இன்று நடந்த ஒரு நிகழ்ச்சி இதற்கு வலுசேர்கின்றது. தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களுடைய தாயார் சென்னையில் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக இந்தியாவின் அனுமதியை வேண்டியிருந்தார். இந்திய அரசும் முதலில் அதற்கு அனுமதி வழங்கி இருந்தது. ஆனால் அவர் இந்தியா(சென்னை)வந்து இறங்கிய உடனே சென்னையில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு ,அவரை வானூர்தி நிலையத்தில் இருந்தவாறே மலேசியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். இதற்கான காரணம் தெளிவாக தெரிவிக்கப்படவில்லை. ஆனால் வாய்மை ஒன்றையே உயிர் நாடியாக கொண்ட இந்த திருநாட்டில் ஒரு வயதான பெண்மணிக்கு மனித பண்புகளின் அடிப்படையில் கூட மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ள அனுமதித்து இருக்கலாம். மனம் வரவில்லையே?. நடுவண் அரசு கூட தமிழர்க்கு எதிரி என வைத்துகொண்டாலும் ,இங்கு உள்ள தமிழக அரசு கூட அவரை கைவிட்டது ஏன் என்று புரியவில்லை.ஒரு தலைவன் இருக்கின்றான் கலங்காதே - என என்னைத்தான் பாடினார்கள் என்று தம்பட்டம் அடித்துக் கொள்பவர்களாவது அந்த பெண்மணி சிகிச்சை பெற அனுமதி பெற்று தர உதவியிருக்கலாம். ஆனால் எவருக்கும் மனம் இல்லையே?. பாகிஸ்தானிலிருந்து எத்தனையோ பேர் மருத்துவ சிகிச்சை பெற இங்கு வர அனுமதிக்கும் இந்திய , தமிழக அரசுகள் பிரபாகரனின் தாயாரை அனுமதிக்காதது என்ன காரணமாக இருக்கும் என்று விளங்கவில்லை.ஒருவேளை அவர் தீவிரவாதத்தை இந்த மண்ணில் விதைத்துவிடுவார் என்ற அச்சமாக இருக்கும். புவிசார் வல்லரசு என்று தன்னைத்தானே நினைத்துகொள்ளும் ஒரு நாடு , ஒரு வயதான பெண்மணியை எண்ணி அச்சம் கொள்வது நகைப்பிற்குரியது. அப்படி ஒரு காரணம் இல்லையெனில் வேறு என்ன காரணமாக இருக்க முடியும்? . மாநில , நடுவண் அரசுகள் தான் தெளிவு படுத்தவேண்டும். இந்த நாட்டின் தந்தை காந்தியடிகளை சுட்டுக்கொன்ற கோட்சே கூறிய சொற்கள் "ஒரு காங்கிரஸ்காரன் கடைப்பிடிக்கும் வாய்மையை (சத்தியம்) விட தெருவில் திரியும் ஒரு சாதாரண மனிதனின் வாய்மை உயர்வானதாக இருக்கின்றது. காங்கிரஸ்காரனிடம் இருப்பது வாய்மையால்(சத்தியத்தால்) மூடப்பட்ட பொய்மையே(அசத்யமே)". இன்று இந்த வார்த்தைகள் இந்தியாவிற்கு பொருந்துபவையாக இருக்கின்றன. உலகில் வாய்மை பற்றி பேசாத நாடுகள் கடைப்பிடிக்கும் அறநெறிச்செயல்கள் வாய்மை ஒன்றே உயர்வெனக்கொள்ளும் இந்தியாவை விட பன்மடங்கு மேன்மை உடையதாகத் திகழ்கின்றன. இங்கு இருப்பது வாய்மை மேவிய பொய்மையே.

Comments

Popular posts from this blog

2024 தேவார ஆலய பயணம் - 1