மலை ஏற்றம்.













இந்தியா விடுதலை விடுமுறை இந்த முறை சனிக்கிழமை வந்ததால் இரண்டு நாட்கள் தொடர்ந்து விடுமுறை கிடைத்தது. ஆகவே எங்கு செல்லலாம் என சிந்தித்துக் கொண்டு இருந்த போது , எனது நண்பர் ஒருவர் அவருடைய மலைத்தோட்டம் இராசபாளயத்திற்கு அருகில், மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளதாகவும் , இரண்டு நாட்களுக்கு அங்கு செல்லலாம் என்று கூறினார். மறுப்பின்றி ஏற்றுக் கொண்டேன்.என்னுடன் மேலும் ஐந்து நண்பர்களும் சேர்ந்துகொள்ள சனிக்கிழமை காலையில் எங்களது பயணத்தை ஆரம்பித்தோம். எங்களது பொதிகளை சுமந்து வர மூன்று கழுதைகளும் உடன் வந்தன ஆரம்பமே சற்று அச்சத்துடன் தொடங்கியது. மலையின் அடிவாரத்தில் யானையின் நடமாட்டம் மிகுதியாக இருப்பதால் சற்று நேரம் கழித்து கிளம்பலாம் என்று வழிகாட்டியும் பல பயண அனுபவமுள்ள நண்பர் காளி கூறினார். நிற்க . இங்கு ஒரு செய்தியை நான் குறிபிட்டாகவேண்டும் . மலைத் தோட்டங்களில் வேலை செய்வோர் மலை ஏறும்போது யானையால் நாம் துரத்தப் படாமல் இருக்க கழுதையை உடன் அழைத்துச் செல்லவேண்டும் என கூறுகின்றனர். கழுதையிலிருந்து வெளிப்படும் ஒரு நாற்றம் யானையை நமது அருகில் வர விடாது செய்து விடும் என்று கூறுகின்றனர். (இதில் ஏதாவது உண்மை உள்ளதா என்று நண்பர்கள் எனக்கு தெரிவிக்கவும்) இது போன்ற மலை ஏற்றங்களில் இடையே , மலைகளில் கிடைக்கும் நீரைக்கொண்டு தேநீர் தயாரித்து அருந்தும் பழக்கம் எனக்கு உண்டு. ஆனால் இந்த முறை கடுமையான கோடை ஆதலால் அது இயலவில்லை. உடன் வந்தவர்கள் சற்று தொய்வடைந்தாலும் , மூன்று மணி நேரத்தில் மலைத் தோட்டத்தை அடைந்தோம். வழியெங்கிலும் மழையற்ற வறட்சி நிலவியது. ஆனால் மேலே கால நிலை நன்கு குளிர்ச்சியாக இருந்தது. சென்றவுடன் தேநீர் அருந்திவிட்டு , குளிர்ந்த நீரில் ஒரு குளியலை போட்டோம். மதியம் இரண்டு மணி அளவில் உணவு தயாரானது. அங்கே உள்ள நீரினால் சமைத்த உணவு அல்லவா ; சுவையாக இருந்தது. உண்டபின் அனைவரும் சற்று உறங்கினார். நான் எனது அழை பேசியை எடுத்து அதில் உள்ள GPS- இல் உள்ள இருப்பிட செய்தியை கண்டேன் , 3800 அடி உயரத்தில் இருப்பதை காட்டியது. google map - இல் நான் இருக்கும் இடத்தை இன்னும் துல்லியமாக அறிய முடிந்தது. அறிவியலின் ஆற்றல் கண்டு வியந்தேன். கடகரேகை , மகரரேகை முதற்கொண்டு அனைத்து செய்திகளும் என் உள்ளங்கையில் கிடைக்கப்பெற்றேன். மாலையில் சுண்டலுடன் தேநீர் அருந்திவிட்டு அங்கு விளையக்கூடிய மூலிகைகளை கண்டு அவற்றின் பயன் அறிய புறப்பட்டோம். ஏறத்தாழ 14 வகை மூலிகைகளை கண்டோம். ஒளி இன்மையின் காரணமாக அவற்றில் மூன்றை மட்டுமே என்னால் நிழற்படம் எடுக்க முடிந்தது. முடிந்து திரும்பியவுடன் மீண்டும் ஒரு தேநீர் அருந்திவிட்டு , பல்வேறு செய்திகளை பற்றி எங்களது தனிப்பட்ட கருத்தினை பதிவு செய்தோம். அவற்றில் முதன்மையானது ஈழச் சிக்கல். கொடுமை என்னவென்றால் இன்னும் தமிழரில் பலர் தெளிவற்ற மற்றும் அறிவற்ற சிந்தனைப் போக்கையே கொண்டிருக்கின்றனர். பலவித கருத்து பரிமாற்றங்களுக்கு பிறகு இரவு உணவு உண்டோம். குளிர் வலுப்படத் தொடங்கியது. என்னைத் தவிர அனைவரும் இரவு 9 மணி அளவில் உறங்கசென்றனர். நான் மீண்டும் எனது அழை பேசியில் மூழ்கினேன். இலங்கையின் ஷக்தி f.m கேட்டேன். 11.30 மணி அளவில் உறங்க சென்றேன். சூடான காபியுடன் காலைப்பொழுது விடிந்தது. அருகில் சலசலத்து ஓடிக்கொண்டிருந்த ஓடையில் குளித்துவிட்டு உணவை முடித்தோம். சற்று பேசிக்கொண்டிருந்துவிட்டு , சேரநாட்டு எல்லை வரை (கேரளா) சென்று திரும்பினோம், மொத்தம் மூன்று மணி நேரம் பிடித்தது. உச்சியில் GPS 4500 அடி உயரம் காட்டியது. மதிய உணவு முடித்து விட்டு மாலையில் இறங்க திட்டமிட்டு இருந்தோம் , ஆனால் அன்று காலையில் மலை ஏறிய சிலர் , யானைகள் தொந்தரவு மிகுதியாக இருப்பதால் சற்று நேரத்துடன் கிளம்புமாறு எங்களை வேண்டவே , உணவு உண்டவுடன் கிளம்பினோம். வழியில் உள்ள தவம் பெற்ற நாயகி அம்மனை தொழுதுவிட்டு கீழே இறங்கினோம். வருகிற வழியில் , அப்போதுதான் சில யானைகள் சாணமிட்டு சென்றிருந்தன. விரைவாக காட்டை விட்டு வெளியேறினோம்.
Comments
It will be nice if you write some comments below the photo, like where it was taken, who are all there, like that.